வணக்கம் நண்பர்களே

தமிழ்க்கடவுள் முருகன்

 

தமிழ்க்கடவுள் முருகன்

முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன.

இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார்.[1] மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.

தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்த சமயத்துடன் இணைந்தது.


"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.


பிறப்பு

பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.

தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனை தகனம் செய்தது. பிறகு அந்த தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டு கண்களை உடையவர்.


தெய்வானையுடன் திருமணம்




  படிமம்:முருகன் வீதி உலா.jpg



முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார்.

சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன்தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.


வழிபாட்டு முறை

அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினை மாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமஸ்கிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.


முருகன் குறித்த பழமொழிகள்

  • வேலை வணங்குவதே வேலை.
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  • வயலூர் இருக்க அயலூர் தேவையா?
  • காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
  • அப்பனைப்பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
  • முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
  • கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
  • கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
  • பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
  • சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
  • செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
  • திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
  • வேலனுக்கு ஆனை சாட்சி.
  • வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
  • செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
  • கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
  • கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”


அறுபடை வீடுகள்

  • திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
  • திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
  • பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
  • சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
  • திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
  • பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.



ஆதாரங்கள்

  1.  https://www.quora.com/Who-is-really-the-eldest-son-of-Lord-Shiva-Subramanya-or-Ganesha
  2.  http://www.tnguru.com/2016/01/blog-post_47.html
  3.  பன்னிருகரங்களின் பணி - சக்தி விகடன் ஏப்ரல் 14 2012
  4.  http://murugan.org/tamil/shanmugampillai.htm சங்க இலக்கியங்களில் முருகன் பழங்குடி இன வெறியாட்டு வழிபாடு
  5.  கலைமகள்; டிசம்பர் 2014; திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும்; பக்கம் 30-32

வெளி இணைப்புகள்

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
முருகன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Oldest